Skip to main content

“புயல் பாதிப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
TN Govt is a pioneer in dealing with the storm disaster says Minister Thangam Thennarasu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பாதிப்பு, நெற்பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்பு எனப் பாதிப்புகளுக்கு ஏற்றார்போல் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தக்கம் தென்னரசு, “புயல் பேரிடரை எதிர்கொண்டதில் தமிழக அரசு முன்னோடியாக உள்ளது. வெள்ள மீட்புப் பணிக்கு முதல்வரே நேரில் சென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்கிறது. அமைச்சர்கள் தொடர்ந்து மழை, மீட்புப் பணியில் களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா படத்துடன் நிவாரணம் வழங்கிய நிலையில், தற்போது அப்படி செய்யாமல் எந்த படமும் இன்றி உடனுக்குடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. புயல் பாதிப்பு ஏற்பட்டபோது எதிர்க்கட்சி தலைவர் சேலத்தில் இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு புயலின் போது அதிமுக அரசு ரூ. 5000 வழங்கியது; திமுக அரசோ ரூ. 6000 வழங்குகிறது. நிவாரண தொகைக்கான டோக்கன் வரும் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும். நாளை வரும் மத்தியக் குழுவிடம் நிதி உதவி குறித்து கோரிக்கை வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை; சிக்கிய கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Property documents worth rs.15 crores were seized in conducted at the former MLA's house

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் கடந்த 2011-2016ம் ஆண்டுகளில் நகரமன்ற தலைவராகப் பதவி வகித்தவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம். அப்போது நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்த பெருமாள் ஆகிய இருவரும் பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை வாகன நிறுத்துமிடமாக அமைக்க ஏலம் விட்டதில் சுமார் ரூ. 20 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் நேற்று முன்தினம்(பிப்.27) எம்எல்ஏ சத்யாவின் கணவரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் பண்ருட்டி நகராட்சி ஆணையர் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முன்னாள் நகர் மன்றத் தலைவர் பன்னீர்செல்வம், சென்னை பெரம்பூர் ஐவகர் நகரில் உள்ள முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாள் ஆகிய 2 பேர் வீடுகளிலும், இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் எனக் கருதப்படும் நபர்களான பண்ருட்டி கந்தன்பாளைம் பெருமாள், பண்ருட்டி இந்திரா காந்தி சாலை செந்தில் முருகன், பண்ருட்டி திருவதிகை கடலூர் மெயின்ரோடு பிரசன்னா என்கிற சம்பத்ராஜ், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு மோகன்பாபு ஆகிய 4 பேர் வீடுகள் என 6 பேர் வீடுகளிலும் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ந.தேவநாதன் தலைமையில் 6 குழுக்கள் வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர். 

இதில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 ஆகும். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான பாண்டியன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி எம்.எல்.ஏ.வுமான அருண்மொழிதேவன் மற்றும் அ.தி.மு.கவினர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை அறிந்து முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் உள்ளே விடவில்லை. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பின்னர் புறப்பட்டுச் சென்றனர்.

Next Story

பிரதமருக்கு புகழ்ச்சி... மாநில தலைமைக்கு கொட்டு... - விந்தியா அதிரடி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Actress Vindhya has criticized Tamil Nadu BJP and DMK

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குப்தா, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,  நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,  ஆவின் முன்னாள் சேர்மன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், தலைமைக்கழக பேச்சாளர் வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர், நடிகை விந்தியா, “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்து வந்த அ.தி.மு.க.வை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கட்டி காப்பாற்றி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் ஒரு நல்ல மனிதர். உண்மையான தமிழன். எளிமையான தலைவர். தமிழ்நாட்டில் கடலைமிட்டாய் போன்று கஞ்சா வாங்க முடிகிறது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஹீரோவாக இருந்த போலீசார் இன்றைக்கு திமுக ஆட்சியில் ஜீரோவாக இருக்கிறார்கள். இதனைத் தட்டிக் கேட்க இந்த அரசு தயங்குகிறது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அமல்படுத்தி மேலும் ஏழை, எளிய மக்கள் இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் திமுக அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை படிப்படியாக நிறுத்திவிட்டார். 

பிரதமர் மோடி தமிழகத்தில் வருகை தந்து பேசும்பொழுது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவருக்கு இந்த இரண்டு தலைவர்களின் அருமை தெரிகிறது. ஆனால் இங்கிருக்கும் பாஜக தலைமைக்கு அது தெரியவில்லை. அதிமுகவின் பலத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் பொதுமக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். திமுகவை இந்த தேர்தல் மூலம் விரட்டி அடிப்பார்கள்” என்று பேசினார்.  கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.