
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் நேற்று (26.02.2025) வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “இன்று (27.02.2025) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (28.02.2025) தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தென்காசி, தூத்துக்குடி, இருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் ((01.03.2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதையொட்டி 12 மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.