Skip to main content

அரிக்கொம்பன் யானை விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்த தமிழக அரசு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

tn government has announced that the elephant will be released in the dense forest

 

கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது.  இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அங்கு பலரது வீடு மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பகுதி முழுவதும் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதனிடையே அரிக் கொம்பன் யானையை மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகப் போக்கு காட்டி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறை அதிகாரிகள் மயக்க மருந்து செலுத்தி இன்று பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கும்கி யானைகளின் உதவியுடன் அரிக்கொம்பனை லாரியில் ஏற்றிச்சென்ற வனத்துறை அதிகாரிகள் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடவுள்ளதாகத்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

இதனிடையே தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோபால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த மே 27 ஆம் தேதி கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுழைந்த அரிக்கொம்பன் யானை, விளை நிலங்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் யானையைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும். அத்துடன் குழு அமைத்து அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிப்பதாலேயே, அவை ஊருக்குள் நுழைகின்றன’ எனக் கருத்து தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து யானையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்றும், அரிக்கொம்பன் யானை அடர்ந்த வனப்பகுதியான முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.