Skip to main content

அமைச்சர் ஆதரவாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

tn assembly election minister it raid

 

தேர்தல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், வருமான வரித்துறையும் தங்கள் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பான தொகுதி விராலிமலை. எதற்கும் பஞ்சமில்லாத தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும், தி.மு.க. வேட்பாளராக தென்னலூர் பழனியப்பனும் போட்டியிடுகின்றனர். கடும் போட்டியில் பிரச்சாரங்கள் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமைச்சர் தரப்பு பரிசுப் பொருள் கொடுக்க தயாராகி உள்ளதாக தி.மு.க. தரப்பு புகார் கொடுத்திருந்தது. எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சில நாட்களாக அ.தி.மு.க. சேலைகள், மளிகைப் பொருட்கள், பல கிராமங்களின் வரைபடம் மற்றும் பெயர்கள் உள்ள டைரி ஒன்று சிக்கியுள்ளது. மற்றொரு பக்கம் கடந்த ஒரு வாரமாக திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை பகுதியில் சுற்றி வந்தனர்.

 

tn assembly election minister it raid

 

இந்த நிலையில், இன்று (26/03/2021) விராலிமலை வடக்கு ஆசாரித் தெருவில் உள்ள சுகாதார ஆய்வாளர் வீரபாண்டியன் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் மதியத்தில் இருந்து சோதனையைத் தொடங்கியுள்ளனர். சுகாதார ஆய்வாளர் வீட்டில் ஏன் வருமான வரித்துறை சோதனை?

 

இந்த வீரபாண்டியன், பெயருக்குத்தான் சுகாதார ஆய்வாளர். அவர் எந்த மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அதற்கு முன்பிருந்தே அமைச்சர் விஜயபாஸ்கரின் அண்ணன் மேட்டுச்சாலை மதர் தெரசா கல்லூரிகளின் நிர்வாகி உதயகுமாரின் உதவியாளர். எல்லா பரிமாற்றங்களும் இவர் மூலமே நடக்கும், எப்பவும் பையும் கையுமாகவே சுற்றுவார். அதனால்தான் அவருக்கு சகாதார ஆய்வாளர் பணியைக் கொடுத்து பக்கத்திலேயே வைத்திருக்கிறார்கள். இதேபோல, இன்னும் 10- க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் வேலை செய்யும் இடம் கூட தெரியாமல் அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு அமைச்சருடன் சுற்றுகிறார்கள் என்றனர் விபரம் அறிந்தவர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Income Tax officials conducted a surprise raid at the office of a DMK official

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நா.அசோகன். வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார். இவர் அரசு ஒப்பந்ததாரராகவும், தோட்டப்பாளையம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்தும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி இரவு சுமார் 7 மணி அளவில் வேலூரை சேர்ந்த கூடுதல் கமிஷனர் பூரணசந்திரன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகி அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டி.பி.கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டிருந்தது.  

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு இரவு சுமார் 9:43 மணிக்கு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரிண்டிங் பிரஸ்சின் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில், 'முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள் பணம் எதுவும் கிடைக்காத நிலையில் வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்' என கூறினார்.