
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) காலை தொடங்கியது.
முதல்நாளான இன்று (12/03/2021) தமிழகம் முழுவதும் 51 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 50 ஆண் வேட்பாளர்களும், ஒரு பெண் வேட்பாளரும் அடங்குவர். அதிகபட்சமாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 4 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க., சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வரும் நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதால், அடுத்து வரும் நாட்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.