
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியின் பண பலம், அதிகார பலம், ஆங்காங்கே காவல்துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்து கழகத்தினரும், கூட்டணிக் கட்சி தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருக்கின்றனர்! பாராட்டுகள்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு அவற்றைக் காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நாம் இருந்திடலாகாது. நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை மறந்து விடக் கூடாது; வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மையங்களைப் பாதுகாப்பது நம் கடமை.
வேட்பாளர்களும், நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பாதுகாக்கப்பட்ட மையங்களை 24 மணி நேரமும், இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும்.
வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் 'டர்ன் டியூட்டி அடிப்படையில்' அமர்ந்து கண்காணித்திட வேண்டும். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது!" இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.