திருவண்ணாமலை மாவட்டம், போளுர் டூ வேலூர் சாலையில் உள்ளது சந்தவாசல் கிராமம். இந்த சந்தவாசலுக்கு உட்பட்ட சிறு கிராமம் நாராயணபுரம் கொள்ளைமேடு. இந்த கிராமத்தில் வசிப்பவர் தட்சணாமூர்த்தி. விவசாயியான இவருக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. கோடை வெயிலாக இருந்ததால் பயிர் செய்யாமல் விட்டு வைத்திருந்தார்.
![tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/mULIeFE-WYp8_b-x6Hoes2Innwxct0gDlt__vbDCWvM/1557792476/sites/default/files/inline-images/tiruvannamalai_0.jpg)
இந்நிலையில் கடந்த சில தினங்களாக லேசாக மழை பெய்து மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் ஏர் ஓட்டி வைக்கலாம் என மே 13ந்தேதி காலை ட்ராக்டர் மூலமாக ஏர் ஓட்டியுள்ளார். அப்போது தட்சணாமூர்த்தியின் மகன் 4 வயதேயான அவினாஷ், நானும் ட்ராக்டரில் வருகிறேன் என அடம் பிடித்துள்ளான். தட்சணாமூர்த்தியும், மகனை தூக்கி ட்ராக்டரில் உட்கார வைத்துக்கொண்டு ஏர் ஓட்டிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே உட்கார்ந்துயிருந்த அவினாஷ் சறுக்கிக்கொண்டு அப்பா என கத்தியபடி கீழே விழுந்துள்ளான். ட்ராக்டரை நிறுத்தும் முன் பின் சக்கரம் அக்குழந்தையின் மீது ஏறியது. இதனால் சம்பவயிடத்திலேயே அவினாஷ் இறந்துள்ளான்.
குழந்தை மீது ட்ராக்டர் ஏறி இறந்ததை பார்த்து தட்சணாமூர்த்தி கத்தி, கதறி அழ, சத்தம் கேட்டு அவரது குடும்பத்தார், அக்கம் பக்க நிலத்துக்காரர்கள் ஓடிவந்து பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இதுபற்றி சந்தவாசல் போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்டதும், அவர்கள் சம்பவம் நடந்தயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அதோடு, தட்சணாமூர்த்தியை அழைத்தும் விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தை மீதான அதீத பாசம் மற்றும் கவனக்குறைவால் 4 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.