திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பேரூராட்சி திமுக செயலாளராக இருப்பவர் சீனுவாசன். துணைச் செயலாளர்களாக கவுன்சிலர் ரஞ்ஜித்குமார், பெண் பிரதிநிதித்துவத்தில் தவமணி ஆகியோர் உள்ளனர். கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை நகர துணை செயலாளர் தவமணியின் கணவரும், நகர விவசாய அணி அமைப்பாளருமான வெங்கட்ராமன் செங்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ளார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய வெங்கட்ராமன், “30 வருடங்களாக கட்சியில் இருக்கிறேன். கிளை செயலாளராக பல ஆண்டுகள் கட்சிப்பணி செய்தே, இந்த அளவுக்கு வந்துள்ளேன். இப்போ இங்கே கோஷ்டி பூசலில் கட்சியிருக்கு. தொகுதி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் என்று சொல்லும் சிலர், நான் நகர செயலாளர் ஆதரவாளர் என்று என்னை மிரட்டறாங்க. ஒரு மாதத்துக்கு முன்பு என்னை பேரூராட்சி கவுன்சிலர் ரஞ்ஜித்குமார் மிரட்டினார். அப்போதே காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த 21ஆம் தேதி டீ கடை அருகே என் நிலத்தில் வேலை செய்தவங்களுக்கு கூலி பணம் தந்துக்கிட்டு இருந்தேன். அங்கே வந்து, ‘புகார் தந்தியே என்னை என்ன பண்ணமுடியும் என்று கேட்டு வீணா பிரச்சனை செய்து, என்னை தாக்கி அடிச்சி உதைத்தார். இதுக்கு அங்கயிருந்த பொதுமக்களே சாட்சி. இப்போ புகார் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சி நிர்வாகிகள் கேட்டதற்கு எம்.எல்.ஏ எதுவும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சொல்லிட்டதாக போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுது. எம்.எல்.ஏ இப்படி ஒருதலைப்பட்சமாக நடந்துகிறது நியாயமா?” எனக்கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து விளக்கம் பெற கவுன்சிலர் ரஞ்ஜித்குமாரை தொடர்புகொண்டபோது அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.
இதுக்குறித்து நாம் விசாரித்தபோது, “புதுப்பாளையம் பேரூராட்சி கலசப்பாக்கம் தொகுதிக்குள் வருகிறது. தொகுதி எம்.எல்.ஏ சரவணனுக்கும் – புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான சுந்தரபாண்டியனுக்கும் இடையே உட்கட்சி மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் எம்.எல்.ஏ கோஷ்டியினர் சேர்மன் தரப்பினர் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் பலப்பல பிரச்சனைகள். கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்குள் சாதாரண வாய் சண்டையாக ஆரம்பித்த பிரச்சனை இப்போது அடித்துக்கொள்ளும் அளவுக்கு வந்து நிற்கிறது. அடுத்த என்னவாகும் எனத்தெரியவில்லை.
மாவட்டச் செயலாளர் உட்பட நிர்வாகிகள் இதில் யார் மீது தவறு என விசாரித்து அறிவுரை சொல்வதோ, நடவடிக்கை எடுப்பதோ இல்லை. கட்சியினர் வந்து புகார் சொன்னாலும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதாலே இங்கு கட்சிக்குள் பிரச்சனை வளர்ந்து கொண்டே இருக்கிறது” என்கிறார்கள்.