தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, எம்.எஸ்.எம். ஆனந்தன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாரிமுத்துவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.