
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முன்னீர்பள்ளம் அருகே உள்ளது கீழ்முன்னீர்பள்ளம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் செல்வசங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர் அப்பகுதியின் 9வது வார்டு திமுக கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று (13.05.2025) இவர்கள் குடும்பத்தினரோடு உணவு அருந்தி விட்டு வீட்டில் உறங்கியுள்ளனர். இதனையடுத்து இன்று (14.05.2025) அதிகாலை 4 மணியளவில் அவர்களது வீட்டின் முன்பகுதியில் பலத்த சத்தத்துடன் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போது தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக தீயை அணைத்துள்ளனர். அதோடு அங்குப் பாட்டில் உடைந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து முன்னீர்பள்ளம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிவசங்கர் காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 இரு சக்கர வாகணத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்டமாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திமுக நிர்வாகியின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் கொண்டு வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.