விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.