நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் உறுதி தந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த வருசம் நீட் தேர்வு உண்டா ? இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சூழலில், நீட் தேர்வு ரத்து செய்ய வழி இருக்கிறது என்றும், அதனை தமிழக அரசு சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்கிறார் பாமகவின் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு.
இதுகுறித்து பேசும் கே.பாலு, ‘’நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 29.4.2020-ல் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தது அப்போதைய தமிழக அரசு (எடப்பாடி அரசு). அப்போது, அந்த மனுவில் உள்ள பல குறைபாடுகளை உச்சநீதிமன்றத்தின் பதிவுத்துறை சுட்டிக்காட்டியிருந்தது. இதனால் இந்த வழக்கு நீதிபதிகளின் முன்பு பட்டியலிடப்படாததால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் சாதகமான தீர்ப்பு வராது என்பதாலேயே, திட்டமிட்டே கால தாமதம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த மனுவில் உள்ள குறைபாடுகள், 17.6.2020 , 17.9.2020 , 1.6.2021 , 17.6.2021 ஆகிய தேதிகளில் சரிசெய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜூலை 1-ந்தேதி (1.7.2021) இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு உச்சநீதிமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தற்போதைய தமிழக அரசு (திமுக அரசு ) பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, 29.4.2020 அன்று நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அந்த தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று புதிதாக ஒரு மனுவையும் தாக்கல் செய்து, இந்தியாவின் தலை சிறந்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்காடினால் நிச்சயம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெற முடியும். இதனை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆக, நீட் தேர்வுக்கு விலக்கு பெற அருமையான துருப்புச் சீட்டு தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ‘’ என்கிறார் வழக்கறிஞர் கே.பாலு.