சென்னையில் கத்தியைக் காட்டி மிரட்டி அதனை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் வீடியோவாக வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்ததோடு வழக்கம்போல் மாவு கட்டும் போட்டுள்ளனர்.
சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய நண்பர் வெங்கடேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென வழிமறித்த மூன்று இளைஞர்கள் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு அவர் கையிலிருந்த மோதிரத்தைப் பறித்துள்ளனர்.
இதுதொடர்பாக சதீஷ்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் அவர்களைத் தேடினர். அப்பொழுது அந்த இளைஞர்கள் அதே பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே சுற்றி வளைத்த போலீசார் அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்களின் செல்ஃபோனை வாங்கி பார்த்த பொழுது கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டுவது மேலும் ஆக்ரோஷமாக கத்தியை கையில் வைத்துக்கொண்டு நடப்பது போன்று வீடியோ பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் வீடியோ பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. வீடியோ வெளியிடுவதைத் தாண்டி கத்தியைக் காட்டி பணம் பறித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. விக்னேஷ், கிங்ஸ்லி பால், விஷ்ணு ஆகிய மூன்று பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையின் போது தப்பி ஓட முயன்ற விக்னேஷ் கீழே விழுந்து கை உடைந்ததால் போலீசார் மாவுக்கட்டு போட்டுள்ளனர்.