திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நாயக்கனேலி கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட வேலை செய்யும் (மேஸ்திரி) சாமிநாதன் (55), இவரது மனைவி மகாலட்சுமி (45). இவர்கள் இருவரும் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியில் உள்ள சோலாபூரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட வேலை செய்யும் (மேஸ்திரி) சௌந்தர்ராஜன் மற்றும் 17 வயதான பிரிதிவிராஜ் இருவரும் பெரிய ஏரியூரில் நடைபெற்ற எருது விடும் விழாவைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
சாமிநாதன் ஓட்டிவந்த வாகனமும் செளந்தர்ராஜன் ஓட்டி வந்த வாகனமும் அரிமலை கூட்டுச்சாலை அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில், சாமிநாதன் அவரது மனைவி மகாலட்சுமி, சௌந்தர்ராஜன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் இருந்த பிரித்திவிராஜ்ஜை அப்பகுதி மக்கள் ஓடிவந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர், உடனடியாக மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தியோடு வந்தவர்களை பலி வாங்கிட்டியே உனக்கு கண் இல்லையா ஆத்தா என குடும்பத்தினரும் உறவினர்களும் அழுத அழுகை பொதுமக்களையும் கலங்க வைத்தது.