![NN](http://image.nakkheeran.in/cdn/farfuture/r4MHiAfQ4igy-jYpgtyet0ZpHCm59ocBQZ-_DKoxO58/1685884974/sites/default/files/inline-images/NM211.jpg)
200 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கோவில் திருவிழாவில் புழக்கத்தில் விட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள தென்னம்புலம் என்ற பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. அப்பொழுது கோவில் திருவிழாவிலிருந்த கடைகளில் 200 ரூபாய் போலி நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் 200 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கோவில் திருவிழா கடைகளில் பொருட்களை வாங்குவதுபோல் போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஜெகதீஸ்வரன், சந்தோஷ், விஸ்வநாதன் என்கிற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 ரூபாய் போலி கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் மற்றும் கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.