நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கேள்வி நேரமின்றி நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“பதில் இல்லாதவர்கள் கேள்விகளை ஒழிப்பார்கள். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு வந்துள்ளது. உறுப்பினர்களின் கேள்வி நேரம் நீக்கப்பட்டுள்ளது. அதானி, மணிப்பூர், சிஏஜி அறிக்கை என எதிர்க்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலில்லாத ஒரு அரசு வேறென்ன செய்யும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.