Skip to main content

தூத்துக்குடி: 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு : உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்ட 6 பேரின் உடல்களை இன்று உடற்கூறு ஆய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஜிம்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அந்த உடற்கூறு ஆய்வு 4 ஜீடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடத்தப்பட்டது. அனைத்து செயல்பாடுகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

 

 

6 பேரின் உடல்களும் உடற்கூறு செய்த பின்னர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் இன்றைய தினம், லூர்து அம்மாள் புரத்தைச் சேர்ந்த கிளாட்சன், தாமோதர் நகரைச் சேர்ந்த மணிராஜ், புஷ்பா நகரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், திரேஷ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

 

இந்த ஒவ்வொருவரின் உடல்கள் செல்லும்போது ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி. கபில்குமார், எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோரின் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. நகரின் விவிடி சிக்னல், மில்லர்புரம் மையவாடி, திரேஷ்புரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் போலீஸ் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு தரப்பட்டது. இந்த பாதுகாப்புடன் இந்த நான்கு பேரின் உடல்கள் அந்தந்த ஏரியாக்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து உசிலம்பட்டி ஜெயராமனின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்றைய தினம் 5 உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. 6வது உடலான தாளமுத்து நகரின் அந்தோணி செல்வராஜ் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அவரது உடலை பெறுவதற்கு உறவினர்கள் வெளிநாட்டில் இருப்பதால் நாளை பெற்றுக்கொள்வதாக அங்குள்ள உறவினர்கள் தகவல் கொடுத்ததன் நாளை அவரது உடல் ஒப்படைக்கப்பட உள்ளது. இத்துடன் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் தொடருகிறது. 

 

 

உடற்கூறு ஆய்வு நடக்கும்போதும், உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும்போதும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருப்பதற்காக மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஆளில்லா ட்ரோல் கேமரா விமானத்தை அனுப்பி போலீசார் கண்காணித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.