காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுகமான முடிவு இன்னும் எட்டவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், வி.சி.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.வி. தங்கபாலு ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது தொல். திருமாவளவன் எம்.பி. பேசுகையில், “அமைதியாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கிற தொழிலாளர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக தலையிட்டால் தான் சுமூகமான தீர்வு கிடைக்கும். எனவே இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுவோம். ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி ஒரு சங்கத்தை பதிவு செய்வதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தயக்கம்?. சாம்சங் நிறுவனத்திற்கு நாங்கள் எதிராக இல்லை. அவர்களின் அடக்குமுறை போக்கிற்கு எதிராக இருக்கிறோம்.
பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக நாங்கள் இல்லை. அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதை தான். எதிர்க்கிறோம் சங்கம் வைத்து கொள்வதற்கு ஜனநாயக பூர்வமான உரிமை உள்ள போது அதை அரசும், அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “சாம்சங் தொழிலாளர்கள் 10 பேரிடம் பேசி தீர்வு கண்டதாக அமைச்சர்கள் கூறுவது ஜனநாயக விரோதம். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தின்போது காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் எலன், சூரியபிரகாஷ் ஆகிய இருவருக்கும் 15 நாட்கள் சிறை விதித்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதே சமயம் சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சிஐடியு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.