Skip to main content

திருவாரூர் இடைத்தேர்தல்... அதிமுக அமைச்சர்களின் கணக்கும், மக்களின் கொந்தளிப்பும்

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை வெளியிட்ட நிமிடத்தில் இருந்து தேர்தல் ஜூரம் அரசியல் கட்சிகளிடம் அடிக்கத்துவங்கிவிட்டது. புத்தாண்டில் வாழ்த்து செய்திகளோடு ஆலோசனைகளே அதிகம் நடத்தப்பட்டுவருகிறது.

 

t

 

"யார் யார் வேட்பாளர்,  தேர்தல் நடக்குமா நடக்காதா, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏன் தேர்தல் நடத்தவில்லை, கஜாபுயலால் அதிகம் பாதித்த மாவட்டங்களுள் ஒன்றான திருவாரூர் தொகுதிக்கு அவசர அவசரமாக தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் என்னவேண்டியிருக்கு. கஜாபுயலுக்கான நிவாரணத்தை அறிவித்த கையோடு தேர்தல் தேதியையும் அறிவித்தது எதனால், தேர்தல் நடக்குமா அல்லது பருவ மழையை காரனம் காட்டி அதிமுக அரசு தேர்தலை ஒத்திவைத்தது போல் நிவாரணத்தை காரனம் காட்டி ஒத்திவைக்குமா" இப்படி பொதுமக்களிடமும் அரசியல்வாதிகளிடமும்  முனு முனுப்பைக்கேட்க முடிகிறது.

 

இந்நிலையில்  அதிமுக அமைச்சர்களோ தடுக்கிவிழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது என்பது போலவே பேட்டிக்கொடுத்து வருகின்றனர்.

 

jj

 

 

அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார். "தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரைபோல. ஆனால் சிலருக்கு பாகற்காய் , எட்டிக்காய் போன்றது. ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது. இன்று என்ன நிலமை, எங்க கோட்டையாகிடுச்சி சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம். எங்களின் கோட்டையாக மாற்றுவோம்." என்று கூறினார்.

 

jj

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜோ, "இந்த ஆட்சியையும், கட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் திறம்பட நடத்திவருகின்றனர். கூடுதலாக இரட்டை இலை சின்னம் உறுதுணையாக இருக்கும். கஜாபுயலால் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி 48 கிலோமீட்டர் பயணம் செய்து நிவாரணப்பணிகள் செய்தார். 10 கிலோ மீட்டர் நடந்தே சென்று மக்களை சந்தித்து நிவாரணம் வழங்கினார். அதனால் பெரிய அளவில் மக்கள் ஆதரவு இருக்கு." என்று வாய்க்கூசாமல் கூறினார்.

 

திருவாரூர் வாக்காளர்களோ, "கஜாபுயலால் சின்னாபின்னமான திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களை  ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வந்தனர். மழையை காரணம் காட்டிவிட்டு திருவாரூர் மற்றும் நாகையை பார்க்காமல் சென்றுவிட்டனர். பிறகு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கண்டனத்திற்கு பிறகு ரயில்பயணமாக இரண்டு மாவட்டங்களை 8 மணி நேரத்தில் பார்வையிட்டுவிட்டு ரயில் ஏறி சென்றுவிட்டனர். முதல்வரின் வருகைக்காக அழைத்துவரப்பட்ட மக்களோ செத்தபோது வரச்சொன்னா கருமாதிக்கு வாருவார் என்று கோபத்திற்கு ஆளாகினர்.

 

அதோடு புயல் கரையை கடந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது, இன்னும் பல இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை, பல இடங்களில் அறிவிக்கப்பட்ட பொருட்களில் பாதியை களவாடிக்கிட்டு மீதியை வழங்குகின்றனர்.  கணக்கெடுப்பு பணிகள் முழுமை அடையலன்'னு. ஊருக்கு ஊர் போராட்டம் நடத்துறாங்க, இந்த நிலமையில செய்ததை சொல்லி வாக்குகேட்போம்'னு வாய்க்கூசாம பொய் சொன்னா, துயரங்களை அனுபவித்துவரும் நாங்க நம்பிடுவோமா. எங்க தொகுதியோட உங்களுக்கு முடிவு கட்டுறோம் ."என்கின்றனர் எரிச்சலாக.
 

 

 

சார்ந்த செய்திகள்