திருவண்ணாமலை நகரில் கஞ்சா அதிகமாகிவிட்டது என்கிற புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ச்சியாக ரெய்டு செய்து கஞ்சா விற்பனையாளர்ளைப் பிடித்து சிறையில் அடைத்து வருகின்றனர். கடந்த வாரத்தில் 5 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்துள்ளனர். அப்படியிருந்தும் திருவண்ணாமலை நகரிலேயே கஞ்சா விற்பனையைத் தடுக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளது காவல்துறை.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலைக் கிரிவலத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வார இறுதி நாட்களில் அது நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. இரவு நேரத்தில் வெளிமாநில பக்தர்கள் பக்தியுடன் கிரிவலம் வருகின்றனர்.
ஜூன் 14ஆம் தேதி இரவு 9.0 மணியளவில் கிரிவலப்பாதை சூரிய லிங்கம் அருகே சாமியார்கள் என்கிற யாசகர்கள் சிலர் ரோட்டில் ஓட ஓட அடித்துக்கொண்டனர். அதோடு கிரிவலம் வந்த பக்தர்கள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்துள்ளனர், அவர்களுக்குள் ஏதோ தகராறு உருவாக கஞ்சா போதையில் இந்த யாசகர்கள் அடித்துக்கொண்டது கிரிவலப்பாதையில் சென்ற பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சாலையோரம் பக்தர்கள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு பக்தர்கள் கால்வலியை போக்க அமர்வதற்காக சாய்வு பெஞ்சுகளும், மழை, வெயிலுக்கு ஒதுங்கி நிற்க நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை யாசகர்கள் ஆக்கிரமித்து தங்களுக்கான வாழ்விடமாக வைத்துக்கொண்டு பக்தர்களிடம் யாசகம் பெறுகின்றனர். இவர்கள் பக்தி மார்க்கத்தில் இருக்கிறார்கள் என பலரும் மூன்று வேளையும் இலவசமாக உணவு, காபி தருகிறார்கள். யாசகம் பெறும் பணத்தில் கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்களை வாங்கி உட்கொண்டுவிட்டு கிரிவலப்பாதையில் அட்டகாசம் செய்வதாகக் கூறப்படுகிறது.
யாசகர்கள் அடித்துக் கொள்வது குறித்து காவல்துறையினருக்கு தகவல் சொல்ல தொடர்புகொண்டபோது யாரும் போன் எடுக்கவில்லையாம். இவர்கள் அடித்துக்கொண்டு கொலையாகிவிடுமோ என மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்கள், அவரும் ஃபோன் எடுக்கவில்லையாம். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக யாசகர்கள் அடித்துக்கொண்டு சண்டை போட்டார்கள் என்கிறார்கள் அப்போது வாக்கிங் சென்றவர்களும், அங்கு கடை வைத்திருப்பவர்களும்.
கிரிவலம் பாதுகாப்புக்கு என 24 மணி நேர இருசக்கர வாகன ரோந்து படை அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் கிரிவலப்பாதையில் ரவுண்ட்ஸ் வந்து கொண்டே இருப்பார்கள். தவறு செய்பவர்களை எச்சரித்தார்கள், பல சம்பங்கள் இதனால் தடுக்கப்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இப்போது ரவுண்ட்ஸ் சரியாக வருவதில்லை என்கிறார்கள். இதனால் கஞ்சா, மது குடித்துவிட்டு இவர்களுக்குள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள் என்கின்றனர்.
நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?