Skip to main content

மஜக நிர்வகி கொலை- ஆஜரான 6 பேருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

thirupathur mjk incident

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராகவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும் இருந்து வந்த வசீம் அக்ரமை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை அவரது அலுவலகத்தில் இருந்து துரத்தி வந்துள்ளனர். சாலையில் ஓட ஓட விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். அந்த கும்பலுக்குப் பாதுகாப்பாக ஒரு விலை உயர்ந்த இனோவா கார் பின்னாடியே வந்தது. அவர்கள் வெட்டி முடித்த பின் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்தக்கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. வெட்டிய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர்.

 

thirupathur mjk incident

 

இந்த தகவலைக் கேள்விப்பட்டு வாணியம்பாடி நகர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். படுகொலை தகவல் காவல்துறைக்குச் சொல்லப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர் உடல் கைப்பற்றப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து வசீம் அக்ரமின் ஆதரவாளர்கள் வாணியம்பாடி நகரப் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த கொலை வழக்கில் 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 6 பேரும் போலீசாரால் வாணியம்பாடி கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஆஜரான பிரவீன்குமார், அஜய், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், செல்வக்குமார் ஆகிய 6 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் வீசும் துர்நாற்றம்; நோயாளிகள் குற்றச்சாட்டு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Bad smell wafting from Vaniyambadi Government Hospital

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச்  சேர்ந்தவர் சத்யா (30). கர்ப்பிணியான சத்யாவின் கரு கலைந்துள்ளது. இதனால் கடந்த வெள்ளிகிழமை அன்று மிகுந்த வயிற்று வலி ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  மேலும் மருத்துவமனையில்  சேர்ந்து வயிற்றை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.அதே வார்டில் சுமார் 7 நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தினமும் காலையில் ஒரு ஊசியும் மாலையில் ஒரு ஊசியும் செலுத்தி விட்டு மாத்திரைகள் கொடுத்துவிட்டு செல்வதாகவும் நேற்று வரை வயிற்றை சுத்தம் செய்து உரிய சிகிச்சை அளிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வார்டில் கட்டில்கள் மேலிருக்கும் போர்வைகள் சரியாக சுத்தம்  செய்யப்படாமல் ரத்தக் கரையுடன் இருப்பதாகவும் தங்கியுள்ள அறையின் கழிவறையிலிருந்து அதிகப்படியான துர்நாற்றம் வீசுவதால்,  அறையில் உள்ள அனைவரும்  துர்நாற்றம் தாங்க முடியாமல் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உணவு உண்பதும்  உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.