ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் ஏழுமலையான் சாமிக்கு ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 29ந்தேதி தொடங்கி அக்டோபர் 8ந்தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 30ந்தேதி தொடக்க விழாவிற்கு ஆந்திரா அரசின் சார்பிலும், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சார்பிலும் சுவாமிக்கு பட்டு வஸ்த்திரங்கள் கொண்டு வந்து சார்த்தப்படும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து பிரம்மோற்சவத்தின் அழைப்பிதழை திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி மற்றும் அதிகாரிகள் வழங்கினர். அதன்பின் அந்த அழைப்பிதழை பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டியிடம் செய்தியாளர்கள் தேவஸ்தானத்தில் சேகர்ரெட்டி நியமனம் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், சேகர்ரெட்டி திருமலையில் 12 கோடி செலவில் கோ பிரதட்சண சாலை கட்டித்தருகிறார். அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்திலும் இருந்து விடுதலையாகியுள்ளார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் அவருக்கு பதவி தந்ததில் எந்த தவறுமில்லை என்றார்.
2015ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில், தமிழகத்தின் சார்பில் திருப்பதி திருமலை தேவஸ்தான உறுப்பினராக இருந்த சேகர்ரெட்டியின் வேலூர், சென்னை போன்ற இடங்களில் உள்ள வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கணக்கில் வராத 100 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்தனர். பின்பு சேகர்ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் அவர் மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளில் இரண்டு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.