
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்த திருமாவளவன் எம்.பி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தவே அரசு மது விற்பனையை அனுமதிக்கிறது என்ற கருத்தில் நம்பிக்கை இல்லை. அது ஏற்புடையதும் இல்லை. அதனால் பயனும் இல்லை. எனவே முதல் அமைச்சர் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். திமுக அரசு பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமூக நீதியை முன்னிறுத்தி ஆட்சியை நடத்தி வருகிறது என்கிற அடிப்படையில் விசிக இந்த கூட்டணியை ஆதரிக்கிறது. வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. அதிகாரிகள் செய்த குளறுபடிகளால் ஒட்டுமொத்தமாக திமுக அரசை நாம் குறைத்து மதிப்பிட முடியாது” என்றார்.
இதனைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணி கட்சிகளே கள்ளச்சாராயம் குறித்து வாய் திறக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த திருமாவளவன், “மதுவிலக்கை வலியுறுத்தி நாங்கள் போராட வேண்டும் என்பது சரிதான்; இல்லை என்று சொல்லவில்லை. அவ்வப்போது மதுவிலக்கு குறித்து எங்களது கருத்தை தெரிவித்து வருகிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மதுவிலக்குக்கு ஆதரவாக என்ன போராட்டம் நடத்தியிருக்கிறார். அப்படி அவர் போராட்டம் நடத்துவார் என்றால் அவருடன் சேர்ந்து போராடத் தயாராக உள்ளோம்” என்றார்.