Skip to main content

“நீட் தேர்வால் சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்பதால் எதிர்க்கிறோம்” - திருமாவளவன்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Thirumavalavan said  We oppose NEET because social justice is affected

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய திருமாவளவன் எம்.பி, “நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டிருப்பதால் ரத்து செய்யக் கூறவில்லை. நீட் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாலும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பதாலும் தான் எதிர்க்கிறோம். மாநில அரசு அதிகாரம் பறிக்கப்படுகிறது. சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாக உள்ளது. விளிம்பு நிலை மக்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதலை தொடுக்கக் கூடாது எனவே நீட் வேண்டாம். 720 க்கு 720 / 719 / 718 மார்க எப்படி வந்தன? கோடிக்கணக்கான ரூபாய் நீட் தேர்வு தொடர்பான ஊழல் முறைகேட்டில் புழக்கத்தில் உள்ளன. நீட் பயிற்சி அளிக்கின்ற மையங்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரத்தை எடுத்துக் கொள்கிற ஆதிக்க போக்கை கண்டிக்கிறோம். நீட்டுக்கு முன் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே சிபிஎஸ்சி மாணவர்கள் தேர்ச்சி பெற முடிந்த நிலையில் நீட்டுக்கு பிறகு 60% பேர் ஆக மாறியுள்ளது. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி தற்போது இரண்டு சதவீதத்திற்கும் கீழே அமைந்துள்ளது.

நீட் தேர்வு சிபிஎஸ்சி மற்றும் வசதிப் படைத்த மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்தியாவில் OBC சமூக தலைவர்கள் தங்களை வளர்க்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் பாஜகவை ஆதரிக்கிறார்கள். சந்திரபாபு மூலம் ஆந்திராவிலும், எடியூரப்பா மூலம் கர்நாடகாவிலும், சுரேஷ் கோபி மூலம் கேரளாவிலும் கால் பதித்துள்ளனர். அவர்கள் குதிங்கால் பதிக்காத இடம் தமிழ்நாடு தான். இந்த நொடி வரை அதை சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாகத் தான் தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது ஐந்து இடங்களை வெற்றி பெற்று விட வேண்டும் எனப் பாஜகவினர் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியும். தமிழ்நாட்டு மக்களிடையே அந்தப் புரிதல் வலுவாக உள்ளது. 

திமுக கூட்டணி பலத்தால் வென்று குவித்து விட்டோம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்ற புரிதல், கருத்தியல் மக்களுக்கு கணிசமாக இருக்கிறது. பாஜக ஆர்எஸ்எஸ் சங்பரிவார் எதிர்ப்பு தமிழ் மண்ணில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்கு அடிப்படை பெரியார், திராவிடர் இயக்கங்கள் தான். இனி தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கும் மண்டலுக்கு முன் - மண்டலுக்கு பின் என்றுதான் பகுப்பு ஆய்வு செய்ய வேண்டியது இருக்கும். பாஜக கூட்டணியிலிருந்து யாரை இந்தியா கூட்டணி பக்கம் இழுக்கலாம் என்பதை விட இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தான் அவசியம். இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை இழுப்பதற்காக மோடி, அமித்ஷா எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். 

மைனாரிட்டி அரசாக இதனைக் கொண்டு செல்ல நினைப்பார்கள் என்றெல்லாம் நாம் நினைக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்குக் கூட அவர்கள் முயற்சிப்பார்கள். நீட்டை ஒழிப்பதாக இருந்தாலும், சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான கோணத்தில் சங்பரிவர்களை, அவர்களுக்கு எதிரான செயல் திட்டங்களை வரையறுப்பதுதான் நம் முன்னால் இருக்கக்கூடிய மிக முக்கியமான சவால்", என்றார்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

 நீட் முறைகேடு வழக்கு; உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரி கேள்வி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Supreme Court Chief Justice Chandrachud questioned NEET malpractice case

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. 

அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் இன்று (18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்கிறார்.

இது உண்மையாக இருந்தால், மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.  மேலும், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதித்து உத்தரவிட்டார். 

Next Story

“தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான போக்கைக் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.” - தொல்.திருமாவளவன்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Thirumavalavan said Karnataka govt should stop its trend against Tamil Nadu people

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கர்நாடக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கடண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி ஜூலை 31ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் எனக் கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டது. ஆனால் ‘காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்;  28% அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு,  காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப்போகிறோம்’ என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூலை 14ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. 

கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73% தண்ணீரும் ,ஹேமாவதி அணையில் 55 % தண்ணீரும் , கிருஷ்ணராஜ சாகர் அணையில் 54 %  தண்ணீரும் , கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது எனக் கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கைத் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

காவிரிப் பிரச்சினையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவேரிப் பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 

“கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகளடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.