Thirumavalavan said Karnataka govt should stop its trend against Tamil Nadu people

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் கர்நாடக அரசுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கடண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி ஜூலை 31ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் எனக் கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Advertisment

தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டிஎம்சி தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு ஆணையிட்டது. ஆனால் ‘காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்; 28% அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப்போகிறோம்’ என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூலை 14ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73% தண்ணீரும் ,ஹேமாவதி அணையில் 55 % தண்ணீரும் , கிருஷ்ணராஜ சாகர் அணையில் 54 % தண்ணீரும் , கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது எனக்கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கைத் கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

Advertisment

காவிரிப் பிரச்சினையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவேரிப் பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

“கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகளடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.