Skip to main content

"தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை"- தொல்.திருமாவளவன் பேட்டி!

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

thirumavalavan mp pressmeet at madurai airport

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை; அரசியல் தலையீடு உள்ளது. பாரதிய ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை இந்த அறிவிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. மேற்கு வங்கத்தில் தமிழ்நாட்டை விட 60 தொகுதிகள் தான் அதிகம். தமிழ்நாட்டில் ஒரே நாளில் தேர்தல்; ஆனால், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை நடத்த இருக்கிறார்கள். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

 

1931- ல் எடுத்த சென்சஸ் மட்டும்தான் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். அதன்பிறகு. ஓபிசி சமூகத்தில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நிகழவே இல்லை. ஒருவேளை 10.5% வன்னியர்கள் இருக்கிறார்கள் என்றால், 1931- ல் எடுக்கப்பட்டக் கணக்காக இருக்க முடியும். இப்போது நடப்பது 2021- ஆம் ஆண்டு, ஏறத்தாழ 70 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம். ஆகவே 36- ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் 2001 மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் கேட்டவர் எப்படி 10.5 சதவீதத்திற்கு ஒத்துக்கொண்டார்.

 

அப்படி என்றால் மீதமுள்ள 9.5 சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா, இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. தேர்தலுக்காகச் செய்யப்பட்ட ஒன்றாக தான் தெரிகிறது. தேர்தல் நாடகமாகத் தான் தெரிகிறது. இந்த சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேறினாலும் கூட ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான் இது சட்டமாகும். கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் கூட அறிவிப்புகளாகவே இருக்கிறது. எனவே, அனைத்தும் தேர்தல் நாடகம் என்றே கருத வேண்டி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான், ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நம்மால் அறிய முடியும்.

 

அந்த அடிப்படையில் வேண்டுமானால் ஒதுக்கீடுகளை வழங்கினால், அது சமூக நீதி அடிப்படையில் செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் இது வெறும் தேர்தல் நாடகம்தான். குறிப்பாக, பார்ப்பனர்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் பாரதிய ஜனதா ஓபிசி ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது. அப்படி சீர்குலைப்பதற்கு சாதி அடிப்படையில் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராது. சமூகத்தை சாதி அடிப்படையில் பிரிப்பதே நினைவுப்படுத்துவதே பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் மிக முக்கியமான முதன்மையான நோக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாவது அணி உருவாகும். ஆனால் எப்போதுமே இரு துருவ தேர்தல்தான் நடக்கும்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்