Skip to main content

சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் அந்த வெண்மணி துயரத்தை உழைக்கும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் - திருமாவளவன்

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
t

 

வெண்மணி வெங்கொடுமை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’1968 டிசம்பர் 25 அன்று கீழத்தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் அருகே உள்ள வெண்மணி கிராமத்தில் அந்த வெங்கொடுமை அரங்கேறியது. சாதிய – நிலவுடைமை ஆதிக்க வெறியர்களின் ஈவிரக்கமற்ற வன்முறை வெறியாட்டத்திற்கு 44 உயிர்கள் பலியாயின. பொதுவுடைமை இயக்கத்தினரின் துணையோடு கூலி உயர்வுக் கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளர்களான தலித் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ண நாயுடு என்கிற பண்ணையாரின் தலைமையிலான சாதிவெறி கும்பல் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஒரு கைக்குழந்தை உட்பட 44 பேர் தீயில் கருகி சாம்பலாயினர். சாதி வெறியர்களுக்கு அஞ்சி ஒரே குடிசைக்குள் பதுங்கிய 44பேரையும் உயிரோடு கொளுத்தியது அக்கும்பல். உலகமே ஏசுபெருமானின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் வெண்மணியில் பண்ணை ஆதிக்க சாதிவெறியர்கள் தலித்துகளின் சாம்பலில் வெறிக்கூத்தாடிய கொடுமை அரங்கேறியது. உழைக்கும் வர்க்க உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

 

கூலி உயர்வுக்கான போராட்டத்தில் தலித்துகள் மட்டுமின்றி தலித் அல்லாத பிறசாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்களும் பங்கேற்றார்கள். எனினும்,   தலித்துகள் மட்டுமே குறிவைத்துக் கொல்லப்பட்டார்கள். விவாசாயத் தொழிலாளர்களின் அப்போராட்டம் ஒரு வர்க்கப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டாலும் அடிப்படையில் அது சாதி ஆதிக்க ஒடுக்குமுறையை நிலைநாட்டுவதற்கான களமாக அமைந்துவிட்டது. அதாவது, இப்போராட்டத்தில் வர்க்க முரண்களோடு சாதிய முரண்களும் கூர்மை அடைந்தன.

 

இந்திய சமூக கட்டமைப்பில் வர்க்க முரண்கள், தேசிய இன முரண்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட போராட்ட களங்கள் யாவற்றிலும், சாதிய முரண்கள் குறுக்கிட்டு கூர்மை பெறுவதைக் காணமுடிகிறது. வெண்மணியில் பண்ணை ஆதிக்க ஒடுக்குமுறைகளை எதிர்த்த அப்போராட்டம் தலித்துகளுக்கு எதிரான சாதிய ஒடுக்குமுறையாக பரிணாமம் பெற்றது. இம்மண்ணில், வர்க்க ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, பெரும்பான்மை அடிப்படையிலான மத ஒடுக்குமுறை போன்ற யாவற்றிலும் சாதிய ஒடுக்குமுறையும் பின்னிப் பினைந்ததாகவே அமைவதை காணலாம். எனவே, இங்கே அனைத்து வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக போராடுவது என்பது அடிப்படையில் சனாதன கோட்பாட்டுக்கு எதிரான போராட்டமாகக் கட்டமைக்கப்பட வேண்டும்.

 

இத்தகைய புரிதலோடு வெண்மணி வெங்கொடுமையின் 50ஆம் ஆண்டு வீரவணக்க நாளை விடுதலைச் சிறுத்தைகள் நினைவு கூர்வோம். சாதிய – நிலவுடைமை ஆதிக்க வெறிக்கு பலியான வெண்மணி தோழர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அந்நாளில் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் அந்த வெண்மணி துயரத்தை உழைக்கும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். ஆங்காங்கே வீரவணக்க பொதுக்கூட்டங்கள், அரங்க கூட்டங்கள் ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள், விவசாய அணியுடன் இணைந்து ஒருங்கிணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.’’

 

சார்ந்த செய்திகள்