Thief caught in the tea shop!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டு, வழிப்பறி கொள்ளை ஆகிய சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் காரணமாக அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல்துறையினருக்குஉத்தரவிட்டுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து விழுப்புர மாவட்ட போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், பிரம்மதேசம் போலீசார் நேற்று திண்டிவனம் அருகே அய்யனார் கோயில் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள டீக்கடை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் சுற்றித்திரிந்ததை கண்டு அவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர்.

Advertisment

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை அசோக் நகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் வெங்கடேசன் என்கிற கலச வெங்கடேசன்(36) என்பதும், இவர் கடந்த 20ஆம் ஆண்டு முதல் திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீஸ்சார், அவரிடம் இருந்து சுமார் ரூ.8.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.