18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 222 இடங்களிலும், மற்றவை 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சுற்றிலும் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 14,503 வாக்குகளும் மோடி 9,505 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ''10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மோடி வாரணாசியில் தெருத் தெருவாக, வீடு வீடாகப் போனவர் எதற்காக பின்னடைவைச் சந்திக்கிறார். மக்கள் அவரை தூக்கி எறிந்து விட்டார்கள். மக்கள் அவரை அங்கீகரிக்கவில்லை''என்றார்.
அப்பொழுது 'மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சி' குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு பதில் அளித்த அவர், ''இதைத்தான் எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். இந்த பங்கு சந்தையில் எதற்காக நேற்றைய தினம் பத்தாயிரம் பாயிண்ட்டுக்கு மேலே ஏறியது? இன்று பத்தாயிரம் பாயிண்டுகள் இறங்கி இருக்கிறது? என்ன காரணம்? சரி தேர்தல் முடிந்தது ஜூன் 1ம் தேதி. எண்ணிக்கை என்று நடந்திருக்க வேண்டும், ஒரு நாள் விட்டு இரண்டாம் தேதி நடந்திருக்க வேண்டும். ஏன் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை. பங்குச்சந்தையில் பாஜக மிகப்பெரிய ஊழலை நேற்று ஒரு தினத்தில் செய்துள்ளது. பல லட்சம் கோடியை சம்பாதித்து இருக்கிறது. லாங், ஷாட் என்று சொல்வார்கள். இவர்கள் ஷாட்டில் போய் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு மாலை விற்று விட்டார்கள். இதில் பாஜக தலைவர்கள் எத்தனை கோடி லட்சம் சம்பாதிக்க போகிறார்கள் என்பது போகப் போக விசாரணையில் தெரிய வரும்'' என்றார்.