
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் நாகை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் எல்லாம் வெள்ள நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்'' என்றார்.
அப்பொழுது 'சொத்து வரி உயர்வுக்கு நீங்கள் தான் காரணம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி. ''ஏங்க அதிமுக அரசு இருக்கும் வரைக்கும் சொத்துவரி உயராமல் பார்த்துக் கொண்டோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சொத்து வரியை உயர்த்தி விட்டு எங்கள் மீது பழியை போடப் பார்க்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கிறேன் என்று சொல்கிறீர்களே. மத்திய அமைச்சரையெல்லாம் கூட்டி வந்து விழா நடத்துகிறீர்களே. ஏன் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படும் பொழுது சொத்து வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஏதாவது போராட்டம் நடத்தினீர்களா? அல்லது நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தீர்களா? ஒன்றுமே கிடையாது. எங்கள் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் தான் சொத்து வரியை ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்றிய சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். சும்மா எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆட்சியில் இருப்பவர்கள் தானே இதை செய்ய வேண்டும். ஆட்சியாளர்கள் என்னென்ன வாக்குறுதி கொடுத்தார்கள். தேர்தல் அறிக்கையை பார்த்தீர்களா? ஆட்சிக்கு வந்தால் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள். ஏன் உயர்த்தி உள்ளீர்கள்?'' என கேள்வி எழுப்பினார்.