
அண்மையில் நெல்லையில் தமிழக முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்தும் முதல்வர் விமர்சித்து பேசியிருந்தார். முதல்வர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனும் கலந்துகொண்டார். முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் எழுப்பவில்லை மேலும் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் நயினார் நாகேந்திரன் வெளியேறவில்லை.
இந்நிலையில் பிரதமரையும் நிதியமைச்சரையும் விமர்சித்த முதல்வரின் நிகழ்ச்சியில் இருந்து நயினார் நாகேந்திரன் ஏன் வெளியேறவில்லை? முதல்வரை ஏன் கண்டிக்கவில்லை என பாஜகவின் நிர்வாகி கராத்தே தியாகராஜன் பேசியிருந்தார். பின்னர் அறிக்கையாகவும் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் கராத்தே தியாகராஜனின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் 'இதைப் பற்றிக் கூற கருத்தே கிடையாது. நான் வெளியேறாததற்கு காரணம் சபை நாகரிகம் என்று ஒன்று இருக்கிறது'' என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.