
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் 'தான் மேற்கொள்வது சனாதன தர்ம யாத்திரை இல்லை. ஆலயங்களில் சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
அண்மையில் சனாதனம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதியின் பேச்சுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எதிர்வினையாற்றி இருந்தார். அது தமிழகத்தில் பரபரப்பான பேசுபொருளானது. இந்தநிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பவன் கல்யாண் சனாதான தர்ம யாத்திரை நடத்த இருப்பதாக பவன் கல்யாண் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியானது.
அதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பரசுராமர் சுவாமி கோவிலில் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு அவர் சனாதான தர்ம யாத்திரையை தொடங்கியதாக கூறப்பட்டது. தொடர்ந்து தஞ்சை வந்த அவர் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதேபோல் இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் 'இது சனாதன தர்ம யாத்திரையா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நான்கரை வருடமாக முருகன் கோவிலுக்கு எல்லாம் போக வேண்டும் என நினைத்திருந்தேன். முதன்முறையாக கேரளா சென்று விட்டு வந்தேன். இது ஒரு சாமி தரிசன நிகழ்வு தான். ஆசீர்வாதம் வாங்குவதற்கு தான் வந்தேன். சனாதன யாத்திரை செய்தால் சொல்லிவிட்டு தான் வருவேன். தர்ம யாத்திரை செய்ய வேண்டும் என்றால் நான் கண்டிப்பாக வெளியே சொல்லிவிட்டு தான் வருவேன்'' என்றார்.
தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்விக்கு, ''அரசியல் கேட்கக் கூடாது. எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்'' என்றார்.