அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது. அது எங்களிடம் இருக்கிறது என்ற பொறாமையில் ஓபிஎஸ் பேசுகிறார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சேலத்தில் சேவல் சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றுவந்தார். 1989ல் முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தபோது இரட்டை இலை சின்னத்தில் அவர் வெற்றி பெறவில்லை. முதன்முதலில் அவர் எம்எல்ஏ ஆனது சேவல் சின்னத்தில் தான். இன்றைக்கு இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் இருக்கிறது. சில பிரச்சனைகள் காரணமாக சிலர் நீக்கப்படுவது இயற்கை. ஜெயலலிதா காலத்திலும் பலர் நீக்கப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் காலத்திலும் பலர் நீக்கப்பட்டுள்ளனர்.
நீக்கப்பட்டவர்கள் சில காலம் கழித்து இணைந்து கொள்வார்கள். அவர்களாக இணைந்து கொள்வார்களே தவிர கட்சியில் பிளவு இல்லை. ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்டிருப்பது பிளவு கிடையாது. கருத்துவேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிசாமி நீக்கி வைத்துள்ளார். ஒட்டுமொத்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தான ஒற்றைத் தலைமை வேண்டும் என்றது பொதுக்குழுவில் பிரதிபலிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ்-ஐ நீக்கி வைத்திருக்கிறோமே தவிர, கட்சியில் பிளவு கிடையாது. ஓபிஎஸ-ஐ வெளியேற்றிய பிறகு இரண்டு போராட்டம் நடத்தி விட்டோம் தமிழகம் அளவில். பொதுக்கூட்டங்கள் நடத்தி விட்டோம்''என்றார்.