Skip to main content

“இ.பி.எஸ்.க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - முதல்வர் பேட்டி!

Published on 01/12/2024 | Edited on 01/12/2024
There is no need to answer to EPS Chief Minister Interview

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூருக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு மழை வெள்ள நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னை கொளத்தூரில் மட்டுமின்றி தமிழகம் உட்பட குறிப்பாக சென்னை மாநகராட்சியில் வழக்கமாக எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ அங்கெல்லாம் கூட தண்ணீர் தேங்கவில்லை. மழை  நின்ற பிறகு 10, 15 நிமிடங்களில் தண்ணீர் வடிந்துவிடும். புயலால் சென்னை தப்பித்தது என்றும் சொல்ல முடியாது. தத்தளித்தது என்றும் சொல்ல முடியாது. சென்னை நிம்மதியாக இருக்கிறது. நல்லது கெட்டது என மக்கள், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர் என மக்கள் பிரதிநிதிகளிடம் உடனுக்குடன் சென்று  எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் கூறுகிறார்கள். அதனைத் தீர்த்து வைக்கிறோம்.

மழை வெள்ளப் பிரச்சனைக்கு ஒரு அளவுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இன்னும் சில இடங்களில் அதிக மழை மழை பெய்கிறது. அதற்கு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலும்,  திண்டிவனத்திலும் மைலத்திலும் அதிக மழை பெய்துள்ளது. துணை முதலமைச்சர் அங்குச் சென்று கொண்டுள்ளார். அமைச்சர் பொன்முடி நிவாரணப் பணி செய்து கொண்டுள்ளார். இன்னும் பல பணிகள் செய்ய வேண்டும் என்பதற்காக மின்சாரத் துறை அமைச்சரை அனுப்பி உள்ளேன். போக்குவரத்துத்துறை அமைச்சர் அங்குச் சென்றுள்ளார். முக்கிய உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம்.

வானிலையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படிக் கணிப்பது?. திடீரென அதன் நிலை மாறிவிடுகிறது. வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு வைப்பது வேலையாகப் போய்விட்டது. அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். எங்களைப் பொறுத்தவரை ஓட்டு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத் தான் பணிகளைச் செய்து கொண்டுள்ளோம். அதுதான் எங்களுடைய குறிக்கோள். எனவே எதிர்க்கட்சித்த தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கான தேவையும் இல்லை” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்