/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaignar100--mk-cinema.jpg)
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ்த்திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நேற்று (06.01.2024) நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர்கள் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, 50 ஆண்டுகள், 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என எந்த பொறுப்பை வகித்தாலும், தன்னுடைய படைப்புத் திறனை வெளிப்படுத்துவதில் கலைஞர் குறை வைத்ததே கிடையாது. தன்னுடைய எழுத்தாற்றலாலும், பன்முகப்பட்ட படைப்பாற்றலாலும், ரசிகர்களின் உள்ளங்களில் குடியேறியவர் கலைஞர்.
‘வசனம் மு. கருணாநிதி’ என்று இருந்தாலே படம் வெற்றியடையும். சினிமாவில் சான்ஸ் வாங்க கலைஞரின் வசனத்தை பேசி ஒப்புவிப்பது வழக்கம் ஆனது. அதனால் கலைஞரின் வசனப் புத்தகங்கள் அதிகமாக அச்சடிக்கப்பட்டு விற்பனை ஆனது. 1947இல் முதல் படம் ராஜகுமாரி, 2011இல் கடைசிப் படம் பொன்னர் சங்கர் என65 ஆண்டுகளாக கலைத்துறையில் பயணம் செய்து கலையினம் என்பது என் இனம் என்று உங்களில் ஒருவராக இருந்த உங்களின் கலைஞருக்குத்தான் விழா எடுத்திருக்கிறீர்கள். அதனால்தான் திமுக ஆட்சி அமையும்போதெல்லாம் கலைஞரும், திரைத்துறையினருக்கு ஏராளமான நலத் திட்டங்களை, சாதனைகளை படைத்திருக்கிறார். அந்த வழியில்தான், இப்போதைய திமுக அரசும் திரைத்துறையினருக்குப் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலில் கலைஞர் தொடாத உயரங்கள் இல்லை. பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது கலைஞர் எனும் அடைமொழிதான். 'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்' என்பதைத்தான். கலையுலகுக்கும் முத்தமிழறிஞர் கலைஞருக்கும் இருந்த உறவுக்கு அப்பெயரே சிறந்த சான்று.
‘Art should comfort the disturbed and disturb the comfortable’ என்ற வரிக்கேற்பத் தம் படைப்புகளில் எல்லாம் அரசியலை நுழைத்து, சமூக இழிவுகளைச் சாடிய அசலான கலைஞருக்கு அவரது தாய்வீடாம் தென்னகத் திரையுலகத்தின் சொந்தங்கள் எல்லாம் கூடி எடுத்த ‘கலைஞர் 100’ மாபெரும் கலைவிழா கண்டு அக்காவியத் தலைவனின் கொள்கை வாரிசாக, அவர் பண்படுத்திய தமிழ் மண்ணின் முதலமைச்சராக அகமகிழ்கிறேன். அவரது மகனாக நன்றி நவில்கிறேன். 65 ஆண்டு காலம் அவர் பயணித்த துறையில் இருந்து திரண்டு வந்து அவர் நினைவைப் போற்றிய திரையுலக உடன்பிறப்புகள் அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றி. கலைக்கும் கலைஞருக்கும் மரணமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)