
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் “சாட்டை” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் நித்யானந்தாவை பேட்டியெடுத்து கேள்வி பதில் வடிவில் ஒளிபரப்பினார். இந்த வீடியோ கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “திருச்சி துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் இந்த அறிவிப்பு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.