Skip to main content

“தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது” - அமைச்சர் எ.வ.வேலு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
There is no alternative opinion on the need to raise the banks of the Tamiraparani river Minister E.V.Velu

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு அருகே குரும்பல் என்னும் இடத்தில் உள்ள பாலம்  மழைநீர் வெள்ளதால், உடைந்து விட்டது. இப்பாலத்தையும், வெள்ளதால் சேதமடைந்த குடிசை வீடுகளையும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுப்ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உடன் சென்று இன்று (25.12.2023), ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொதுப்ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  பேசுகையில், “வரலாறு காணாத பெய்த மழையினால், நாகர்கோவிலில் 5, விருதுநகரில் 13, தென்காசியில் 13, தூத்துக்குடியில் 113 மற்றும் திருநெல்வேலியில் 44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கின்ற தரைப்பாலம் உடைந்து விட்ட காரணத்தினால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கீரிட் சாலை போடப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1127 தரைப்பாலங்கள் எல்லாம் உயர்மட்டப் பாலங்களாக கட்டி வருகிறோம்.  இதில்,இந்த தரைப்பாலமும் அடங்கும். இந்த தரைப்பாலத்தை, உயர்மட்டப்பாலமாக கட்ட ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்தம் கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

There is no alternative opinion on the need to raise the banks of the Tamiraparani river Minister E.V.Velu

தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவது என்பது இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்த நான்கு மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்து, மூன்று தினங்களுக்குள் தெரிவிக்குமாறு, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளேன். மாஞ்சோலை மலை கிராமத்திற்கு சாலை அமைக்க, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன், சாலை அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

12 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை; அச்சத்தில் வயலோகம் கிராமம்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 12 students with jaundice; Wayalogam village in fear

புதுக்கோட்டையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பள்ளி மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் வசித்து வரும் 12 பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து மஞ்சள் காமாலை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு சிறுவன் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்த செய்தி வயலோகம் பகுதி கிராம மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் தொட்டியின் சுகாதாரமின்மையால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவ, ஊராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீரை நிறுத்தி விட்டு வாகனத்தில் கொண்டுவரப்படும் தண்ணீர் டேங்க் மூலம் குடிநீர் சேவை வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வயலோகம் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story

“இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மரியாதையா?” - அன்புமணி ராமதாஸ்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Anbumani Ramadoss has appealed to the Tamil Nadu government

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது 700 மாணவர்கள் வரை ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமித்தால் போதுமானது; அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அதிகபட்சமாக இரு ஆசிரியர்களை நியமித்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை 2-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதம் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இப்போது 1500 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதமும், அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் கூடுதலாக ஓர் ஆசிரியரும் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.

மாணவர்கள் வளரும் பருவத்தில் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உடற்கல்வி மிகவும் அவசியம் ஆகும். ஒரு பள்ளியில் 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றால், அவர் 4 அல்லது 5 வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து தான் உடற்கல்வி வகுப்பை நடத்த முடியும். ஒரே நேரத்தில் 150 முதல் 200 மாணவர்களை வைத்துக் கொண்டு யாருக்கும் விளையாட்டுகளைக் கற்றுத் தர முடியாது. மாணவர்களைச் சுற்றிலும் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மாணவர்களைக் காக்க வேண்டுமானால், அவர்களை விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுத்தராவிட்டால் மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கும் ஆபத்து உள்ளது. இதை உணராமல் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால், அவரது நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மரியாதையா? பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பை வலுப்படுத்தியும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.