
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜியாவுதீன். இவரது நண்பர் ஜெகதீஷ். ஜியாவுதீனுக்கு ஜெகதீஷ் மூலம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அன்வர் பாஷா, தன்னிடம் வெளிநாட்டு தங்க கட்டிகள் உள்ளதாகவும், ரூ. 15 லட்சம் கொடுத்தால், அந்தத் தங்கக் கட்டிகளைக் கொடுப்பதாகவும் ஜியாவுதீனிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற ஜியாவுதீன், தனது மற்றொரு நண்பரான கார்த்தி என்பவருடன் ரூ.14,50,000 எடுத்துக்கொண்டு, கடந்த 18 ம் தேதி மாலை அன்வர் பாஷாவை துவரங்குறிச்சி, மோர்னிமலை முருகன் கோவில் பின்புறம் சந்திக்க சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும், அங்கிருந்து அன்வர் பாஷாவிற்கு போன் செய்து தாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு மற்றொரு காரில் அன்வர் பாஷா மற்றும் 7 நபர்கள் வந்துள்ளனர். பிறகு அந்த காரில் இருந்து, ஒரு நபரை அனுப்பி ஜியாவுதினிடம் பணம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். பிறகு உடனடியாக, காரில் காக்கி சீருடை அணிந்த ஒருவருடன் மற்ற 7 நபர்களும் சேர்ந்து வந்து, ஜியாவுதீன் மற்றும் அவரது நண்பர் இருந்த காரின் பின்புறம் ஏறி, கார்த்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.14,50,000 பறித்துச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக துவரங்குறிச்சி போலீஸில் ஜியாவுதீன் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை பெற்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோன்று கடந்த 28.01.2023-ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்திற்குட்பட்ட மஞ்சம்பட்டி சந்தானமாதா கோவில் அருகில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி, ரூ.10,50,000 ஏமாற்றியதாக மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், தொடர்புடையவர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாரின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று (21.09.2023) மதியம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொருவாய் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பாலத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரின் அருகில் சென்ற போது, காரில் இருந்த 4 நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிப்பட்ட அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதில், மஞ்சம்பட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் ரூ.10,50,000 ஏமாற்றி பணத்தை எடுத்து சென்றதாக ஒப்புக்கொண்டனர். அதன்பேரில் பிடிபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த ஒரு தங்ககட்டி (100 கிராம்), 10-போலி தங்கக்கட்டிகள், ரூ.2,70,000 பணம், 21 செல்போன்கள், போலி பத்திரங்கள், காசோலை புத்தகங்கள், 12-சிம் கார்டுகள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஜியாவுதீன் வழக்கு தொடர்பாக அந்தக் கும்பலிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளியை பிடித்த தனிப்படையினரின் சிறப்பான செயலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஐ.பி.எஸ். பாராட்டினார்.