
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் உயர்நீதிமன்றம் 12 வாரத்தில் வழக்கை முடிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் சீமான் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
சம்மனில் குறிப்பிட்டிருந்தபடி சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இருப்பினும் அவர் கட்சிப் பணிக்காகச் சென்றிருப்பதாகக் கூறி அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதன் காரணமாக நாளை (28.02.2025) காலை 11 மணிக்குச் சீமான் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டினர். அதில், ‘விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது.

இந்த சம்மனைக் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரைச் சீமான் வீட்டுக் காவலாளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கிய வீட்டுக் காவலாளி கைது செய்யப்பட்டார். காவலாளி வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் கேட்டபோது தர மறுத்துள்ளார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் காவலாளி முன்னாள் ராணுவ வீரர் என்பதால் அவரிடம் துப்பாக்கி இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு சீமான் மனைவி காவல் ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அதிகமாக அங்கு குவிந்து வருகின்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்று வரும் நிலையில் நிர்வாகிகள் அங்கு அதிகப்படியானோர்குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமான் வீட்டில் நடைபெற்ற களேபரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது.