ஒரு கொலை நடந்துவிடும். என்ன காரணத்துக்காகக் கொலை நடந்தது? என்று துப்பு துலக்கப்பட்டு, கொலையாளிகள் பிடிபடும் வரை போலீசார் மண்டை காய்ந்து போவார்கள்.‘அதுதானே அவர்களின் வேலை!’ என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும். ஆனால், எந்த ஒரு கொலையும் காக்கிகளைக் கடுமையாக ‘டிரில்’ வாங்கிவிடும். ராஜபாளையத்தை அடுத்துள்ள தேவதானத்தில் நேற்றிரவு ஒரு கொலை நடந்தது. கொலை செய்யப்பட்ட கருப்பையா, தென்காசி தொகுதி (திமுக) நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமாரின் சித்தப்பா ஆவார். சந்தேகத்திற்குரிய 6 பேரை பிடித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலையான கருப்பையா ரேசன் கடை ஊழியர் மட்டுமல்ல. ஊர் சமுதாயத் தலைவராகவும் இருந்தார். ரேசன் கடை எடையாளர்கள் சங்கத்துக்கும் அவர்தான் தலைவர். அந்தப் பகுதியில் கடந்த மாதம் நடந்த கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் தகராறு செய்தனர். அவர்கள் அடித்து விரட்டப்பட்டதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் கருப்பையா. அதனால் ஏற்பட்ட முன் பகையா? என்பது விசாரணையில் ஒரு கோணம். இன்னொரு கோணத்திலும் இந்தக் கொலை குறித்த விசாரணை நடக்கிறது. கருப்பையா, பெண்கள் விஷயத்திலும் சர்ச்சைக்குரியவராக கருதப்பட்டு வந்திருக்கிறார். பெண் தொடர்பால், பாதிக்கப்பட்ட யாரும் கூலிப்படையை ஏவி கருப்பையாவைக் கொலை செய்திருப்பார்களோ? என்ற சந்தேகமும் விசாரணை வளையத்தில் சிலரை சிக்க வைத்திருக்கிறது.
வயலுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவரைத்தான் காட்டுப் பகுதியில் பிரம்மகுளம் கண்மாய்க் கரையில் வழிமறித்து கழுத்தை அறுத்திருக்கின்றனர். உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென்று கருப்பையாவின் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டது, தென்காசி தொகுதியில் தேவதானம், ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.