ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு கோவிகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ளது கெம்பநாயக்கன்பாளையம். இங்கு மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்தகோவில் பூசாரியாக பெரியசாமி என்பவர் இருக்கிறார். இவர் நேற்று மாலை வழக்கம் போல் பெரியசாமி கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இன்று காலையில் அந்த கோயில் வழியாக சென்ற பொதுமக்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவில் பூசாரிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலையும் கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் தூக்கி சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. சுமார் ஐம்பது வருடம் பழமையான இந்த கோவிலில் நேற்று நள்ளிரவு புகுந்த மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை கொள்ளையடித்து சென்றனர். இந்த கோவிலில் உண்டியல் இல்லை. இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தியமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த மலையடிபுதூரில் புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் கோவில்பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். கோவிலுக்குள் தங்கம் ஏதும் இல்லை. சில்வர் பாத்திரம், கொஞ்சம் பணம் மட்டுமமே இருந்துள்ளதை எடுத்துக் கொண்டனர்.
இந்த மூன்று சம்பவம் குறித்து சத்யமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல்தான் ஏற்கனவே கடந்த வாரம் சத்தியமங்கலத்தையடுத்த துண்டன் சாலை புதூர் அருகே உள்ள குற்றாலத்து மாரியம்மன் கோவிலிலும் இதேபோன்று மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் உண்டியல் பணம் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்த 4 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அம்மன் கோயில்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவது அப்பகுதி மக்களை பீதி அடைய வைத்துள்ளது. இந்தப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த தொடர் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.