ஏடிஎம்மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணிபுரியும் இருவர் சுமார் 13 லட்சம் ரூபாயை கொஞ்சம் கொஞ்சமாக திருடி ஆன்லைனில் ரம்மி விளையாண்டு வந்த நிலையில் தற்போது சிக்கியுள்ளனர். விசாரணையில் ஆன்லைனில் ரம்மியில் திருடப்பட்ட தொகை அனைத்தையும் இழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் செக்யூர் வேல்யூ ஜென்சி என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது ஒப்பந்த அடிப்படையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் களில் பணம் நிரப்பும் வேலையை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சேலம் வீராணத்தை சேர்ந்த மணிவேல் மற்றும் சாகீர்ரெட்டிபட்டியை சேர்ந்த தியாகராஜனும் வேலை பார்த்து வந்தனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த இந்த இரண்டு பேருக்கும் ஆட்டையாம்பட்டியில் உள்ள ஏடிஎம் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த மையத்தில் பணம் வைக்க செல்லும்போதெல்லாம் குறிப்பிட்ட தொகையை இருவரும் திரும்பி வந்துள்ளனர். இதேபோல் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்க நடத்தை சரியில்லை என கூறி தியாகராஜன் வேலையை பறித்தது அந்நிறுவனம். இருப்பினும் மணிவேல் தொடர்ந்து பணியில் இருந்ததால் சிக்கல் இல்லாமல் அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாத கணக்கு தணிக்கையின் போது ஆட்டையாம்பட்டி ஏடிஎம்மில் மட்டும் கடந்த ஓராண்டில் 13 லட்சம் ரூபாய் குறைந்துள்ளது என வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மணிவேலை பிடித்து முதலில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்ட மணிவேல் அது மட்டுமில்லாமல் தியாகராஜனும் கூட்டு சேர்ந்து தான் திருட்டில் ஈடுபட்டோம் எனவும் தெரிவித்துள்ளான்.
திருடப்பட்ட பணம் என்னவாயிற்று என விசாரித்தபோது அவர்கள் கூறிய காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக திருடிய அந்த பணத்தை அதிகமாக பெருக்க நினைத்து ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும், அதில் பணம் முழுவதையும் இழந்து விட்டதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
இருப்பினும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 13 லட்சம் ரூபாய் இழந்ததாக அவர்கள் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல் வேறு ஏதாவது மோசடியிலும் இவர்கள் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.