The Thasildar who asked for the bribe has been arrested

Advertisment

திருச்சி மாவட்டம், கே.கே. நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்குத் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. பூர்வீக நிலமான இதனை அளவீடு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் சீனிவாசன் மனு செய்திருந்தார்.ஆனால் நகர நிலவரி திட்ட சிறப்பு தாசில்தார் கோகுல் என்பவர் நில அளவீடும் பட்டா மாறுதலும் செய்து தராமல் கடந்த 2 மாதங்களாக சீனிவாசனை அலைக்கழித்து வந்துள்ளார்.

இதுகுறித்து சீனிவாசன் கேட்டபோது, பட்டா மாறுதல் செய்து தர ஒரு லட்சம் லஞ்சம் கொடுத்தால் வேலை நடைபெறும் என்று கோகுல் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதன்பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் சீனிவாசன் நேற்று (26.10.2021) மாலை ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ. 50 ஆயிரத்தை லஞ்சமாக சிறப்பு தாசில்தார் கோகுலிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை ஆதாரத்துடன் கைது செய்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, தாசில்தார் அலுவலகம் மற்றும் உறையூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர். விடிய விடிய சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.