
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.
அதே போல தமிழ்நாட்டிலும் கரோனா தொற்று வேகமாக பரவி ஒட்டு மொத்த மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அந்தந்த நகர, கிராம மக்கள் தங்களுக்குள் ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சையளிப்பவர்கள் தங்க போதிய வசதிகள் செய்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இவர்களில் வெள்ளிக்கிழமை மட்டும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பட்டுக்கோட்டை பண்ணவயல் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், மருததுவக்கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைப் பெற்ற அதிராம்பட்டனம் பகுதியைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி, துறையுண்டார்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 மாத கர்ப்பிணி கரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற தகவல் அனைவரையும் அதிரச் செய்தது. இந்தத் தகவல் அறிந்த கர்ப்பிணியின் கணவர், ஒரே நேரத்தில் 2 உயிர்களைப் பறி கொடுத்துட்டேனே... கரோனா வந்து என் மனைவி குழந்தை உயிர்களைப் பறித்துக் கொண்டதே என்று கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.