தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்கக் கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டார்.
தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான பூஜைகள் ஜனவரி 27- ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
![thanjai temple festival chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/AyUqpKk6WM3mHn7snTUHs_BnPeekTpVhB_D_Odjdcms/1580808768/sites/default/files/inline-images/Chennai_High_Court123_5.jpg)
மந்திரங்களைத் தமிழில் சொல்லும்போதுதான் அதன் அர்த்தங்களை பக்தர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதால், குடமுழுக்கு விழாவில் உச்சரிக்கும் மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்து தெரிவிக்கும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிடக் கோரி திருவள்ளூரைச் சேர்ந்த மணிகானந்தா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், குடமுழுக்கு விழாவின் போது தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![thanjai temple festival chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/G6bNTQCBLnfYT2EIR-maEpvf-vj5MQgseyGyX78IxIw/1580808781/sites/default/files/inline-images/thanjai89.jpg)
இதையடுத்து, சமஸ்கிருத மந்திரங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு உள்ளதா எனவும், எந்த அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது எனவும் மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.
மேலும், மனுதாரர் இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறியதால், இந்த வழக்கை பொது நல வழக்குகளை விசாரிக்கும் அமர்வில் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.