தி.மு.கவில் இணைந்த தங்க தமிழ்செல்வனை கண்டித்து திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்ட பகுதியில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் பேசிய தரக்குறைவான பேச்சுகள் அடங்கிய ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரை அ.ம.மு.க.வில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என கூறி வந்த தங்க தமிழ்செல்வன் இன்று திமுக தலைவர் மு. க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க வில் இணைந்தார். மேலும் தினகரனையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.கவில் இணைந்த போது கடும் எதிர்ப்பு தெரிவித்த தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.கவிலாவது இணைந்திருக்கலாம் என அ.ம.மு.க. நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர் தி.மு.கவில் இணைந்தது அ.ம.மு.க. நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதனால் பல்வேறு இடங்களிலும் தங்க தமிழ்செல்வனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அவரை கண்டித்து சமூக வலைத்தளங்களிலும் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் நகர் பகுதியில் அ.ம.மு.க. திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ’நன்றி மறந்த தகர தமிழ் செல்வனே நாவை அடக்கு. துரோகம் செய்த கோமாளியே இனி அரசியலில் நீ அனாதையே’ என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.