/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madras4_14.jpg)
திருக்கோவில் தொலைக்காட்சித் தொடங்குவதற்கு, இந்து சமய அறநிலையத்துறை, பொது நல நிதியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தமிழக அறநிலையத்துறை சார்பில், திருக்கோவில்களின் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, 8.77 கோடி ரூபாய் செலவில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அறநிலையத்துறைதொலைக்காட்சி துவங்க, பொது நல நிதியைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும்,இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘எந்த விதிகளையும் பின்பற்றாமல் அறநிலையத்துறை நிதியைப் பயன்படுத்தி, தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது. அறநிலையத்துறையின் பொது நல நிதியில் இருந்து கோவில்கள் சீரமைப்புக்கு மட்டுமே நிதியைப் பெற முடியும். மேலும், பொது நல நிதியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும்,ஆட்சேபங்கள் கோர வேண்டும். இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை’ என வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்,‘திருக்கோவில் தொலைக்காட்சித் தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. எந்த விதிகளும் மீறப்படவில்லை. கோவில்களுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால்தான் ஆட்சேபங்கள் பெற வேண்டுமே தவிர, தொலைக்காட்சி துவங்குவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே, தொலைக்காட்சி தொடங்குவதை எதிர்த்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)