புதுக்கோட்டை நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் ஜல்லிக்கட்டுக்காக ஒரு காளைக் கன்று வாங்கி வளர்த்து வந்தனர் இந்நிலையில் காளைக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து காளைக்குச் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாத நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சின்னப்பா பூங்கா அருகில் உள்ள ஐயனார் நகரில் உள்ள அடைக்கலம் காத்த ஐயனார், கொடுமுடி கைலாக முனீஸ்வரர் ஆலயத்தில் ஓட்டி வந்து விட்டுள்ளனர். இந்த காளையைக் கோயிலுக்குக் கொடுத்ததுடன் தினசரி வந்து காளையைப் பார்த்துவிட்டு தண்ணீர் வைத்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
உடல் நலக்கோளாறுடன் கோயிலுக்கு வந்த காளை உடல்நலமுடன் கோயில் வளாகத்தில் நின்றது. இதைப் பற்றி அறிந்த மாடு திருடும் கும்பல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு இரவு நேரத்தில் கோயில் காளையைத் திருடி சிறிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றுவிட்டனர். விடிந்து பார்த்த பக்தர்கள் காளையைக் காணாமல் பல இடங்களில் தேடியுள்ளனர். அதோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு காளையின் படத்தை வெளியிட்டுக் காணவில்லை என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவுகளும் வெளியிட்டனர். இந்தப் பதிவு தமிழ்நாடு முழுவதும் பரவியது.
மேலும் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் மாட்டுச் சந்தையில் மாடுகள் வாங்கி விற்கும் வியாபாரிகளுக்குப் பகிரப்பட்ட நிலையில் ஒரு வியாபாரி நான் தான் அந்தக் காளையை ரூ.30 ஆயிரத்திற்கு வாங்கினேன். கோயில் காளை என்பது தெரியாமல் வாங்கிவிட்டோம். காளையை உரியக் கோயிலில் ஒப்படைக்கிறோம் என்று சொன்ன மாட்டு வியாபாரி காளையை விற்றவர்கள் வந்த வாகன ஓட்டுநர் நம்பர் உள்ளது. அவர்களை வரவைக்கிறோம் என்று கூறி புதுக்கோட்டைக்கு மாடு ஏற்றி போகனும் வாங்க என்று சொல்லி வாகனத்தை வரவைத்துள்ளனர்.
அந்த வாகனத்திலேயே கோயில் காளையை விற்றவர்களும் வந்துள்ளனர். உடனே கோயில் காளையைத் திருடி விற்றவர்களைப் பிடித்து மாட்டிற்குக் கொடுத்த பணத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டு அதே வாகனத்தில் அந்த காளையை ஏற்றி விராலிமலை வரை வந்து கோயில் நிர்வாகத்தினரை வரவைத்து அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர். முதல் நாள் இரவு கோயில் காளையைத் திருடி ஏற்றிச் சென்ற அதே வாகனத்தில் புதுக்கோட்டை ஐயனார் நகர் அடைக்கலம் காத்த ஐயனார் கோயிலுக்குக் காளையை ஏற்றி வந்த காளை திருடிய கும்பல் கோயிலில் காளையை இறக்கிவிட்டதுடன் அந்த வாகனத்தையும் கோயிலிலேயே நிறுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் அந்த வாகனம் கோயிலிலேயே நிற்கிறது.
ஐயனார் கோயில் காளை திருடப்பட்டு 24 மணி நேரத்திலேயே திருடியவர்களையே மீண்டும் திருடிய இடத்திற்கே கொண்டு வந்து விட வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போலீசார் மாடு திருடர்களைப் படங்களுடன் அடையாளம் காட்டியும் இன்னும் கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் என்கின்றனர் ஐயனார் பக்தர்கள். இது போன்ற சம்பவங்களில் உடனே நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க முடியும். நடவடிக்கை எடுக்காத நிலையில் திருடர்கள் அடுத்த இடத்தில் திருடத் தான் செல்வார்கள். காவல் துறை நடவடிக்கை மிகவும் அவசியம் என்கின்றனர்.