ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவர், பெருமா நல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன், இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்ட அவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதற்காக பாஸ்கரன், தனது உறவினர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மேலும், 5ஆம் தேதிக்குள்(இன்று) பணம் கொடுத்துவிடுவதாக ஆகாஷிடம் உறுதியளித்திருந்தாராம். ஆனால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால் பாஸ்கரன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பாஸ்கரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர்.
பின்னர், மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டினுள் பாஸ்கரனை காணவில்லை. மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் பாஸ்கரன் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாஸ்கரனின் தாய் சித்ரா(58) அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.