ஈரோட்டில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஜே.ஜே நகரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்குள்ள ஒரு கொரியர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக அந்தப் பெண் தினமும் தனது மொபட்டில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று பணி முடிந்ததும் இரவில் மீண்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் வேலை முடிந்து அந்த பெண் தனது மொபட்டில் ஜே.ஜே.நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது ராசாங்குளம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் சாலை வேலை நடந்து கொண்டு இருப்பதால் மெதுவாக அந்த பெண் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். உடனடியாக அந்த பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் அந்த நபரை மடக்கி பிடித்து அடிக்க தொடங்கினர். அந்த வாலிபர் கூட்டத்தில் இருந்து தப்பித்து ஓடி விட்டார். ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த வாகனத்தை ஓரமாக நிறுத்தி இது குறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.